Aall Maaraattakkaaran
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
ஆள் மாறாட்டக்காரன் என்று அறியாது போனேன்
அசர வைக்கும் பேச்சினிலே நான்
திகைத்து திகைத்து திகைத்து போனேன்
என் ஆளுகையில்தான் ஏழுலகும் என அடித்து சொல்கின்றான்
கோள்களென் கையில் சுழற்றி விளையாடும் பொம்மைகள் என்கின்றான்
கணபதி நானென தும்பிக்கை அசைத்து வா வா என்கின்றான்
கந்தன் அல்லோ நான் என வேலை உயர்த்திக் காட்டுகிறான்
அம்மையப்பனாய் அர்த்த நாரியாய் காட்சி தருகின்றான்
சங்கு சக்கரம் ஏந்தி நான்தான் வேங்கடன் என்கின்றான்
கண்ணனாக குழலை ஊதி மனதை மயக்குகிறான்
பாண்டு ரங்கனாய் இடுப்பில் கையை ஊன்றி ஆடுகிறான்
ஐயப்பன் நான் என்று முழங்கால் மடித்து அமருகிறான்
அழகன் ராமனாக வில்லும் அம்பும் ஏந்துகிறான்
அல்லா ஏசு புத்தன் நானென அமர்க்களம் செய்கின்றான்
ஆஞ்சனேயனாய் பணிவோடு பக்தியும் கலந்து ஊட்டுகிறான்
யாரிவன் யாரிவன் யாரிவன் என்று திகைத்து நின்றேனே - இதோ
பார் எனை என்று விஸ்வரூபனாய் எழுந்து நின்றானே
காஞ்சி மண்ணும் காளத்தி காற்றும் இவனுள் கண்டேனே
நீர் நெருப்பு ஆகாயமாய் நெடிதே நின்றானே
காடு மலையும் பல்லுயிரினமும் தேவரும் கண்டேனே - எனை
காக்க வந்த இறைவன் என்று காலில் வீழ்ந்தேனே
இவன் ஆள்மாறாட்டம் செய்தான் என்று அறியாதே சொன்னேன்
ஆட்கொள்ள வந்த தெய்வம் இவனென ஆனந்தம் கொண்டேனே
Comments