Naan Unnaith Thaedi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
நான் உன்னைத் தேடி வந்தேன்
நீ என்னைக் காட்டி விட்டாய் - உனை
விண்ணில் தேடி நின்றேன் - நீ
மண்ணில் நின்று அழைத்தாய்
கல்லில் தேடிப் பார்த்தேன் - ஒரு
சொல்லில் உணர்த்தி விட்டாய்
படத்தில் பூஜை செய்தேன் - உன்
னிடத்தில் நானே என்றாய்
நான் உன்னைத் தேடி வந்தேன்
நீ என்னைக் காட்டி விட்டாய்
கனவில் பார்க்க விழைந்தேன் - நீயோ
கனலுள் எழுந்து நின்றாய்
காற்றுள் அளைந்து பார்த்தேன் - என்
கருத்தை வருடி நின்றாய்
குறி கேட்க வந்தேன் - உன்னை
அறி என்று சொன்னாய் - என்
குறை தீர வந்தேன் - என்னை
சிறை செய்து விட்டாய்
அன்பைத் தேடி வந்தேன் - நற்
பண்பில் வாழ வைத்தாய் - என்
பசி தீர வந்தேன் - நீ
பதவி தந்து விட்டாய்
கதை பேசித் திரிந்தேன் - என்னைக்
கவிதை சொல்ல வைத்தாய்
விதியில் உழன்று வந்தேன் - நீ அதன்
வேரைக் களைந்து விட்டாய்
மலையில் தேடிப் போனேன் - ஏழு
மலையன் நானே என்றாய்
சிலைக்குள் கூர்ந்து பார்த்தேன் - அதிலே
சிரித்து எழுந்து வந்தாய்
கவலை சொல்ல வந்தேன் - இன்பக்
கடலில் தள்ளி விட்டாய்
புகலை நாடி வந்தேன் - நீ என்
மதலை என்று சொன்னாய்
நிறத்தில் பேதம் கண்டேன் - அதன்
தரத்தைப் பாரு என்றாய் - என்
சிரத்தை பாதம் வைத்தேன் - நீ என்
சிந்தை அமர்ந்து விட்டாய்
அமைதி தேடி வந்தேன்
ஆனந்தம் தந்து விட்டாய்
ஆராய்ச்சி செய்ய வந்தேன் - இன்ப
அதிர்ச்சி தந்து விட்டாய்.
Comentários