Siththa Maruththuvanaam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
சித்த மருத்துவனாம் சங்கரன் மெத்தக் கை ராசியனாம் - நம்
பித்தம் தெளிய வைக்க என்றே பிறந்து வந்தவனாம்
நித்தம் தொழுதாரையும் அடி தொட்டு நேர்மை தேவை என்பான் - அவரை
உத்தமராய் பழக்கி வாழ்வில் உயர்வளித்திடுவான்
சுக்குபொடியென்று சொக்குப்பொடியை தூவிடுவான்
திக்கு திசையெல்லாம் நான்தான் தெரிந்து கொள்ளென்பான்
பற்றைத் துறந்து விட்டு என்னையே பற்றுக என்றிடுவான்
உற்றவன் ஈசனடா உனக்கு என்னடா சொந்தமென்பான்
அன்பெனும் தேன் தடவி தனது ஆட்சிக்குள் ஈர்த்திடுவான்
ஆக்கத்தை கூட்டுதற்கு சக்தியை கூட்டிப் பெருக்கிடுவான்
கள்ளத்தைக் கண்டு விட்டால் மெல்ல கிள்ளி அகற்றிடுவான்
கவலை நேர்ந்து விட்டால் அதனை தாங்கும் திடம் தருவான்
செத்தாற்போல் திரிக என்று சத்தியம் சொல்லிடுவான்
சப்தம் செய்யாமலே நம் நெஞ்சில் சந்நிதி கொண்டிடுவான்
புளிக்கும் ஊழ்வினையை போ போ என்று விரட்டிடுவான்
புத்துயிரை அளித்து புனர் ஜென்மமும் தந்திடுவான்
காரம் குறையாமல் தன் கருத்தை புகுத்திடுவான்
கண் வழியும் நீரை தன் கையால் துடைத்திடுவான்
சாரமிகு வாழ்வு அளித்தேன் சத்தியம் இதென்பான் - நம்
சங்கரனைப் போலே வைத்தியன் ஜகத்தில் கண்டதுண்டோ
Comments